×

204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு: பரிசோதனை செய்யும் பணி தீவிரம்

சென்னை  : சென்னையில் நேற்று வரை 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மண்டல வாரியாக கர்ப்பிணிகள் கணக்கெடுத்து பரிசோதனை செய்யும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில கர்ப்பிணிப் பெண்கள்  நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழிகாட்டுதல்படி பிரசவ தேதி குறிக்கப்படும்  5 நாட்களுக்கு முன்பாக  கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முடிவில் பல கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று இருப்பது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 33 ஆக இருந்த நிலையில் மே மாதத்தில் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.  எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி பெண்களும் , அரசு ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 45 கர்ப்பிணி பெண்களுக்கும்,  கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 கர்ப்பிணிகளுக்கும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் 29 கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மண்டல வாரியாக கர்ப்பிணி பெண்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

‘கர்ப்பிணிகள் பாதுகாப்பு முக்கியம்’
சென்னை: கொரோனா பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுத்தமாக இல்லை மற்றும் கழிவறைகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிவறையை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.



Tags : 204 pregnant, corona, examination
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...